ஒமிக்ரானின் புதிய மாறுபாடு! கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ். அதன் பிறகு இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பலகட்ட உருமாற்றம் பெற்று மிக வீரியமுடன் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் முதன்முதலாக இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசுக்கு ‘ஆல்பா’ என்று பெயரிடப்பட்டது. அதை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தொற்றானது உருமாறியது. இந்த வகை உருமாறிய கொரோனாவுக்கு ‘டெல்டா’ என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் என்று பெயரிட்டது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்த நிலையில் ஒமிக்ரானின் புதிய மாறுபாடு கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது.
ஒமிக்ரானின் இந்த புதிய வகை மாறுபாட்டுக்கு பிஏ.2 என பெயரிடப்பட்டுள்ளது. ஒமிக்ரானின் இந்த புதிய வகை மாறுபாடு பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய மாறுபாடு தற்போது நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் கடந்த 20-ஆம் தேதி டென்மார்க்கில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஐம்பது சதவிகிதம் பேருக்கு ஒமிக்ரானின் இந்த புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவிலும் ஒமிக்ரானின் புதிய மாறுபாடான பிஏ.2 பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இந்த புதிய மாறுபாடு குறித்து கூறுகையில், ஒமிக்ரானின் புதிய மாறுபாடான பிஏ.2 கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும் மீண்டும் தொற்று பரவுவதாக கூறினார். எனவே அரசின் விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.