புத்தாண்டின் போது இதை செய்தால் அதிரடி கைது! சைலேந்திரபாபு கடுமையான எச்சரிக்கை!

0
150

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஏடிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை செய்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவிவரும் புதிய வகை நோய்த்தொற்றை தடுக்கவும், தற்போது தமிழக அரசு ஒரு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது.

அதோடு பண்டிகை காலங்களில் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற காரணத்தால், பொதுமக்கள் பொதுவெளியில் ஒன்று கூடுவதை முற்றிலுமாக தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவித்திருக்கிறது. வருகின்ற 31ம் தேதி அன்று இரவு தமிழகத்தில் இருக்கின்ற கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி கிடையாது. ஆகவே எல்லோரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத விதத்தில் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்திருக்கிறார்.

வழிபாட்டு தலங்களில் தமிழக அரசின் அறிவுறுத்தப்பட்ட நோய்தொற்று விதிமுறைகளை பின்பற்றும் விதத்தில் புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலையோரங்களிலும், கூட்டம் கூடுவதையும் இருசக்கர வாகனங்களில் சுற்றுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது 31ம் தேதி அன்று இரவு காவல்துறையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மது குடித்த ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவார்கள், அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மிக நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து தொடர்வண்டி மற்றும் பேருந்திலும் பயணிக்க அறிவுறுத்தப்படுகிறது. வேகம் அதிகமாகவும், கவனக் குறைவாகவும், வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக, விபத்துகளை தவிர்க்கலாம் என்று கூறியிருக்கிறார் சைலேந்திரபாபு.

அவசர தேவைகளுக்காக நான்கு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணம் செய்பவர்கள் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி அதன் பிறகு பயணத்தை தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஹோட்டல்கள் மற்றும் தங்கும் வசதிகள் இருக்கின்ற உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இரவு 11 மணி வரை செயல்படும். ஹோட்டல் ஊழியர்கள் எல்லோரும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்கிறார்களா? என்று ஓட்டல் நிர்வாகம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டின் தொடர்பான தகவலை அருகில் இருக்கின்ற காவல்நிலையத்தில் தெரிவித்தால் அவர்கள் கண்காணிப்புக்கு ஏற்பாடு மேற்கொள்ளப்படும். இதன்காரணமாக, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் தவிர்க்கப்படும், பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களை ரோந்து வாகனம் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

காவல் துறையிலிருந்து அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 மற்றும் 112 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறும், காவலன் எஸ் ஓ எஸ் செயலியை பயன்படுத்துமாறும், கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விபத்துக்கள் இல்லாத புத்தாண்டாக கொண்டாட தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்கின்றோம், எல்லோருக்கும் தமிழக காவல்துறையின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.