அடுத்த டார்கெட் சூரியன்!! ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி-சி57!! சாதனைக்கு தயாராகும் இந்தியா!

0
96

அடுத்த டார்கெட் சூரியன்!! ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி-சி57!! சாதனைக்கு தயாராகும் இந்தியா!

நிலவின் தென்துருவத்தை ஆராய கடந்த ஜூலை மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.இஸ்ரோ விஞ்ஞானிகளின் கணிப்பின் படி கடந்த ஆகஸ்ட் 23 அன்று மாலை 6:04 மணி அளவில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவதில் வெற்றிகரமாக கால்பதித்தது.இந்தியாவின் இந்த வரலாற்று சாதனையால் உலகமே வாயடைத்து போனது.

இந்நிலையில் அடுத்து சூரியனை ஆராய ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று காலை சரியாக 11:50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.இந்த நிகழ்வை ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

ஆதித்யா எல் 1 குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சூரியன் – பூமி அமைப்பில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1)-ஐ சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆய்வகம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. தடையின்றி தொடர்ந்து சூரியனைப் பார்க்கும் வகையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதால், அது சூரியன் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும்.

எல் 1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் ஆய்வகம் வைக்கப்படுவதால் எந்த தடையும் இல்லாமல் சூரியனைத் தொடர்ந்து பார்க்கும் முக்கிய நன்மை கிடைக்கும். சூரியனின் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலை ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். சூரியனின் வெளிப்புற அடுக்குகளை கண்காணிக்க ஏழு பேலோடுகளை விண்கலம் சுமந்து செல்கிறது. நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கும். மீதமுள்ள மூன்று பேலோடுகள், லாக்ரேஞ்ச் புள்ளி L1 இல் உள்ள துகள்கள் மற்றும் புலங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து அடுத்து சூரியனை ஆராய விண்ணில் இஸ்ரோ ஏவியுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம் குறித்த எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே தற்பொழுது அதிகரித்து இருக்கிறது.