Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு! வெறிச்சோடி காணப்பட்ட தமிழகம்!

நோய்த்தொற்று பரவல் தீவிரத்தை கட்டுப் படுத்தும் விதத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

தலைநகர் சென்னையில் இரவுநேர ஊரடங்கை முன்னிட்டு நகரின் முக்கிய சாலைகள் தடுப்பு கொண்டு அடைக்கப்பட்டன, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஜிபி ரோடு, ஸ்டெர்லிங் சாலை, பீச் சாலை, பெரியார் சாலை, ஜி என் சிட்டி சாலை, உஸ்மான் சாலை, என்று நகரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. முக்கிய சாலைகளை இணைக்கும் இணைப்பு சாலைகள் உள்ளிட்டவையும், அடைக்கப்பட்டன. அதோடு மேம்பாலங்களும் தடுப்பு கொண்டு மூடப்பட்டன பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.

இரவு 10 மணிக்குப் பின்னர் வாகனங்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன, வாகன இரைச்சல் இல்லாமல், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் யாவும் அரவம் இல்லாமல் மாறிப்போயின. சாலைகளில் திரிந்த வாலிபர்கள் ஒரு சிலர் காவல்துறையினரை கண்டவுடன் ஓட்டம் பிடிக்க தொடங்கினர். இரவு பணிக்கு செல்வோர் தங்களுடைய அடையாள அட்டையை காட்டி விட்டு சாலைகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள், மருந்தகங்களுக்கு செல்வோர் உட்பட அவசர தேவைகளுக்காக செல்பவரை விசாரித்த பிறகுதான் காவல்துறையினர் அனுமதித்தார்கள்.

அதேபோல தொடர்வண்டி நிலையங்களுக்கு செல்வதையும் அதற்கு உரிய பயணச் சீட்டுகள் மற்றும் அது குறித்த தகவல்கள் உள்ளிட்டவற்றை சரி பார்த்த பிறகுதான் அவர்களை காவல்துறையினர் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதி வழங்கினார்கள். வழியனுப்ப செல்கின்றோம் என்று தெரிவித்துக் கொண்டு தேவையில்லாத நபர்கள் செல்வதை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை, அதோடு தேவை இல்லாமல் சுற்றித் திரிபவர்களுக்கு காவல்துறையினர் அபராத தொகையையும் விதிக்க தொடங்கினார்கள்.

இரவு நேர ஊரடங்கை முன்னிட்டு கடைகள் யாவும் நேற்று இரவு 9 .30 மணி அளவிலேயே அடைக்கப்பட்டனர். இதன் காரணமாக, இரவு சமயங்களில் திருவிழாக்கள் போல காட்சி தரும் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் ஆங்காங்கே நடமாடும் தேனீர் கடைகளும் இரவில் இருக்கவில்லை இரவு ஊரடங்கை முன்னிட்டு நகரத்தைச் சுற்றிலும் காவல் துறையை சார்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். அந்த விதத்தில் சென்னையில் 312 இடங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு 10000க்கும் அதிகமான காவல் துறையை சார்ந்தவர்கள் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள்.

தலைநகர் சென்னையில் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், ஆவடியில் காவல்துறை ஆணையர் சந்தீப் ராய், தாம்பரத்தில் காவல்துறை ஆணையர் ரவி உள்ளிட்டோர் தலைமையிலும், கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.

அதே இடத்தில் நேற்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் மாநகர் முழுவதும் காவல்துறையினர் கண்கொத்தி பாம்பாக தங்களுடைய கண்காணிப்பு பணியை மேற்கொண்டார்கள். வாகனங்களில் நகர் முழுவதும் சுற்றி வந்து காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. பொதுமக்களும் இரவு நேர ஊரடங்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்று தெரிவிக்கும் அளவிற்கு நேற்றைய நடவடிக்கை இருந்ததாக தெரிகிறது.

அதே போல மற்ற மாவட்டங்களில் நேற்று காவல்துறையை சேர்ந்தவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதாக செல்லப்படுகிறது அந்த தளத்தில் தமிழ்நாடு முழுவதும் ரோந்து வாகனம் தடுப்பு அமைப்பு என்று 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையை சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

தலைநகர் சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தியதை தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டனர். சென்னை நகருக்கு நுழைபவர்களிடம் தீவிர சோதனை செய்யப்படுகிறது, பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அனைத்து வாகனங்களிலும் சோதனை நடைபெறும் என்றும், அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றும், அதேபோல தொடர்வண்டி மற்றும் விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று திருவல்லிக்கேணி துணை ஆணையர் தெரிவித்திருக்கிறார். அதோடு அபராதம், வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள் என்றும், சொல்லப்படுகிறது. 18 இடங்களில் வாகன தணிக்கையில் நடைபெற்று வருகிறது என கூறியிருக்கிறார்.

திருச்சியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து மத்திய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. வாகனத்தில் சுற்றி திரிபவர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள், 30க்கும் அதிகமான இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

Exit mobile version