கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி பணியிடை மாற்றம்!

0
196
#image_title

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி முருகன் சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்திற்க்கு மாற்றம். அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் புதிய மாவட்ட நீதிபதியாக நியமனம்.

கடந்த 2017-ஆம் ஆண்டு கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அந்த சம்பவத்தின் மூலையாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் அருகே விபத்தில் உயிரிழந்த நிலையில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையானது உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை கடந்த ஓராண்டுக்கு மேலாக நீலகிரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி முருகன் விசாரித்து வந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது முதல் வழக்கு விசாரணை பல்வேறு திருப்பங்களுடன் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிபிசிஐடி போலீசார் நீலகிரி மாவட்ட முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ராம்பா உட்பட காவல்துறை அதிகாரிகளிடமும், கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்திற்க்கு நெருக்கமானவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்ட முக்கிய நபர்களிடமும் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.குறிப்பாக தமிழகத்தில் பணியாற்றும் 26 நீதிபதிகள் நேற்று பணியிட மாற்றம் செய்த வெளியான பட்டியலில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்த நீலகிரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி முருகன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

நீதிபதி முருகனுக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் புதிய நீதிபதியாக நியமனம் செய்யபட்டுள்ளார்.