இரண்டாம் கட்ட திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – விவசாயிகள் உட்பட பலருக்கு சலுகை

0
133

இரண்டாம் கட்ட திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – விவசாயிகள் உட்பட பலருக்கு சலுகை

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தாததையடுத்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதை மீட்கும் பொருட்டு ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என பாரத பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதற்கட்டமாக சில திட்டங்களை அறிவித்திருந்தார்.

சுயசார்பு திட்டம் என கூறப்படும் இத்திட்டத்தின் இரண்டாவது கட்ட திட்டங்களை இன்று அறிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில் “12 ஆயிரம் சுய உதவி குழு மூலம் 3 கோடி மாஸ்க், 1.2 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகளுக்கு உதவ, புதிதாக 7,200 சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நகர் புறங்களில் வீடற்றவர்கள் தங்க வைக்கும் முகாம்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு 3 வேலை உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு முகாம் அமைக்கவும், உணவு வழங்கவும், மாநிலங்களுக்கு ரூ.11,002 கோடி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 4,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் மே 13 வரை 14.62 கோடி மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தை விட நடப்பு மே மாதத்தில் 40 சதவீதம் – 50 சதவீதம் வரை கூடுதலான மக்கள் , 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். கொரோனா காலத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஊதியம் ரூ.182ல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், சொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் எங்கு சென்று வேலை செய்தாலும் நலத்திட்டங்களைப் பெறும் வசதி நடைமுறைப்படுத்தப்படுகிறது. சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களுக்கு உரிய வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சி துறை கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. சொந்த ஊர் வந்தவர்களை கண்டறிந்து பதிவு செய்யும் பணி நடக்கிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் பயன்படுத்தப்படும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடுத்த இரு மாதம் இலவசமாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் 8 கோடி பேர் பயனடைவார்கள்.இதற்காக ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக்கடை இல்லாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்கும்.

மலிவு விலை வீடுகளை வாங்குபவர்களுக்கான வட்டி மானியம் ஒராண்டுக்கு தொடரும். கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த திட்டம் மேலும் ஓராண்டு மார்ச் 21 வரை நீட்டிக்கப்படுகிறது.” என்றார்.

இன்று அவர் அறிவித்த திட்ட அம்சங்கள்

  • வீட்டுவசதி துறையை மேம்படுத்த 70 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மலிவு விலை வீட்டுக்கு வட்டி மானியம் அளிப்பதால் 2.5 லட்சம் குடும்பத்தினர் பயனடைவாவர்கள். இதனால், இரும்பு, சிமென்ட், போக்குவரத்து துறை தேவை அதிகரித்து வேலைவாய்ப்பு பெருகும்.
  • பயிர்க்கடன் வழங்கும் ஊரக கூட்டுறவு வங்கிகளுக்கு கடன் வழங்க நபார்டு வங்கி மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.
  • மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தில் ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். கிசான் கடன் அட்டை மூலம்2.5 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
  • பயிர்க்கடன் வழங்கும் ஊரக வங்கிகளுக்கு நபார்டு மூலம் ரூ.30 ஆயிரம் கோடி அவசர கால நிதி அளிக்கப்படும்.
  • வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதிகளில் வேலைவாயப்பை உருவாக்க ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். இதன் மூலம் ஆதிவாசி பழங்குடியின மக்கள் வேலைவாய்ப்பு பெற்று, அவர்களின் பொருளாதாரம் பலம்பெறும்
  • நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ஊதியம் திட்டம் அமல்படுத்தப்படும்.
  • அனைத்து தொழில் நிறுவனங்கள், வேலைகளில் பெண்கள் ஈடுபட அனுமதி அளிக்கப்படுகிறது. உரியப் பாதுகாப்பு வசதிகளுடன் பெண்களை இரவுப் பணியில் அனுமதிக்கலாம்.
  • வெளிமாநில தொழிலாளர்களுக்கு நகரங்களில் உள்ள பயன்படாத அரசு கட்டடங்கள், அரசு – தனியார் பங்களிப்புடன் மலிவு வாடகை குடியிருப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
  • வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த நியாயவிலைக்கடையிலும் பொருட்களை வாங்க அனுமதி
  • குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி வழங்கும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும்
  • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.