மாநில அளவில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் இந்த கழகத்தின் செயல் திட்டம் ஏவி மூலம் பரப்புரை செய்யப்பட்டது. மேலும் இதில் பல முக்கியமான செயல் திட்டங்கள் கழகத் தலைவரின் வாய்ஸ் ஓவர் மூலம் மக்களுக்கு கூறப்பட்டிருந்தது.
100 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த கழகத் தலைவர் அவர்கள், அதன் பின் கட்சியின் செயல்திட்டங்களையும் வெளியிட்டார். மேலும் அச்செயல் திட்டத்தில் ” சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை. அறிவியலுக்கு எதிரான சிந்தனைகள் நிராகரிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அனைவருக்கும் எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்தும் கிடைக்க வேண்டும். தமிழகத்தில் தன்னாட்சி வேண்டும் என்பதே எங்கள் செயல்திட்டம் என்றும், அதனுடன் மது போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் காமராசர் மாதிரி அரசு பள்ளிகள் துவங்கப்படும் என்றும் செயல் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக கட்சி துவங்கும் அனைவரின் மீதும் வர்ணம் பூசப்படுகிறது. ஆனால் என் கழகத்தின் மீது எந்தவிதமான வர்ணத்தையும் பூச விடமாட்டேன் என்றும் ஆவேசத்துடன் கழகத் தலைவர் விஜய் அவர்கள் பேசி இருக்கிறார்.
இவற்றைத் தாண்டி இன்னும் சில விஷயங்களும் செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அது பின்வருமாறு :-
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, சமூக நீதி அடிப்படையில் விகிதாச்சார பங்கீடு.தமிழே ஆட்சி மொழி, தமிழே வழக்காடு மொழி, தமிழே வழிபாட்டு மொழி. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற அழுத்தம் தரப்படும். லஞ்ச, லாவன்யம், ஊழலற்ற நிர்வாகத்திற்கு உறுதி அளிக்கிறோம். முக்கியமாக தீண்டாமையை முழுமையாக ஒழிப்போம் என்றும் அச்செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.