தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் முழுதாக 10 நாட்கள் கூட இல்லை. எப்படியாவது வெற்றி கனியை பறித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக, திமுக, மநீம, நாம் தமிழர், அமமுக ஆகிய 5 கட்சிகளும் களத்தில் பம்பரமாய் சுழன்று வருகின்றன. தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பத்து ஆண்டுகளாக ஆட்சி கட்டியலில் அமராத திமுகவு, தற்போது வைத்திருக்கும் அரியணையை விடாமல் இறுக்கமாக பற்றிக்கொள்ள அதிமுகவும் களத்தில் போட்டா போட்டி நடத்தி வருகிறது. அதேபோல், பாஜகவும் தனது கொடியைப் பறக்க வைப்பதற்காக அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து 20 இடங்களைப் பெற்றிருக்கிறது. இந்த முறை நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று சிலரையாவது சட்டமன்றத்திற்குள் அனுப்பிவிட வேண்டும் என முயற்சி செய்து வருகின்றனர்.
அதற்காக தனது கட்சி போட்டியிடும் 20 இடங்களிலும் பார்த்து பார்த்து வேட்பாளர்களை களமிறங்கியுள்ளது. ஆயிரம் விளக்கில் குஷ்பு, திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சரவணனுக்கு மதுரை வடக்கு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு அரவக்குறிச்சி, பாஜக தமிழக தலைவர் எல். முருகனுக்கு தாராபுரம் தனித்தொகுதி, வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு, காரைக்குடியில் எச்.ராஜா என வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பாஜக வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் மோடி மற்றும் அமித் ஷாவின் புகைப்படங்கள் இல்லாதது தமிழக பாஜக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரதமரை புகழ்ந்து தள்ளும் குஷ்பு கூடஆயிரம் விளக்கில் மலரும் தாமரை என்ற வாசகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தையும், தனது புகைப்படத்தையும் மட்டுமே ட்விட்டரில் முகப்புப் படமாக வைத்திருக்கிறார். அந்த முகப்புப்படத்தில் பிரதமர் மோடி, அமித் ஷாவின் புகைப்படங்கள் இடம்பெறாதது விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.
அதேபோல் பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தொகுதியிலும் சுவர் விளம்பரங்களில் அமித் ஷா, மோடியின் பெயர்கள் காணாமல் போயுள்ளன. எம்.ஜி.ஆர்., அம்மா அவர்கள் நல்லாசி பெற்ற வேட்பாளர் எல்.முருகன் என்றே வாசங்கள் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தலை முன்னிட்டு திடீரென காணாமல் போன மோடியின் புகைப்படங்கள், பெயர் இல்லாத துண்டறிக்கைகள் தலைமை வரை கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது.