கண்ணாடி அணியாமல் பார்வை குறைபாட்டை சரி செய்ய இந்த சொட்டு மருந்தை பயன்படுத்தினால் போதும் என்று பொய்யான விளம்பரம் செய்த பிரஸ்வியூ நிறுவனத்தின் சொட்டு மருந்துக்கு தடை விதித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
நமக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே பார்வை குறைபாடு ஏற்படத் தொடங்கும். இதை சாளேஸ்வரம் என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் பிரஸ்பியோபியா என்று பெயர். அவ்வாறு 40 வயதுக்கு மேல் பார்வை குறைபாடு ஏற்படும் பொழுது அனைவரும் கட்டாயமாக கண்ணாடி போட்டு ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
பிரஸ்பியோபியா நோயால் பாதிக்கப்பட்ட நபர்களால் சிறிய எழுத்துக்களை படிக்க முடியாது. படுத்துக் கொண்டோ உட்கார்ந்தோ தலையை சாய்த்தோ சிறிய எழுத்துக்களை படிக்க முடியாது. அதே போல லேப்டாப், போன் போன்றவற்றை பயன்படுத்த முடியாது. இதை சரி செய்ய வேண்டும் என்றால் கண்ணாடி போட வேண்டும் என்பதை மாற்றும் விதமாக பிரஸ்வியூ நிறுவனம் அண்மையில் ஒரு. விளம்பரத்தை வெளியிட்டது.
இந்த பார்வை குறைபாட்டை சரி செய்ய கண்களுக்கு விடும் சொட்டு மருந்து ஒன்றை புதிதாக கண்டுபிடித்துள்ளதாக பிரஸ்வியூ நிறுவனம் கூறியது. இந்த சொட்டு மருந்தை கண்களில் விட்டால் 15 நிமிடங்களில் பார்வை குறைபாடு சரியாகும் என்று வெள்ளெழுத்து பிரச்சனையும் சரியாகும் என்றும் படிப்பதற்காக தனியாக கண்ணாடி அணியத் தேவையில்லை என்றும் கூறி விளம்பரம் செய்தது.
இந்த கண் சொட்டு மருந்துக்கு பிரஸ்வியூ நிறுவனம் மத்திய மருந்துகள் நிபுணர் குழுவிடம் அனுமதி பெற்றிருந்தது. அதே போல இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளரிடமும் அனுமதி பெற்றது. இந்நிலையில் மத்திய மருந்துகள் நிபுணர் குழு இந்த சொட்டு மருந்துக்கு அளித்த அனுமதியை வாபஸ் வாங்கி இதற்கு தடையும் விதித்துள்ளது.
மத்திய மருந்துகள் நிபுணர் குழு ஏன் திடீரென்று தடை விதித்து என்பது தொடர்பாக அறிவிப்பும் வெளியிட்டிருந்தது. அதாவது இந்த சொட்டு மருந்தை கண்களில் விட்டால் கண்ணாடி அணியாமல் சிறிய எழுத்துக்களை படிக்கலாம் என்று விளம்பரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்த சொட்டு மருந்துக்கு தடை விதித்துள்ளது.
இதையடுத்து மறு உத்தரவு வரும் வரை பிரஸ்வியூ நிறுவனம் இந்த சொட்டு மருந்தை விற்பனை செய்யக் கூடாது என்றும் சந்தைக்கு கொண்டு செல்ல கூடாது என்றும் கூறியுள்ளது. பிலோகார்பைன் என்ற கண் சொட்டு மருந்து பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இந்த மருந்து ஏற்கனவே இருக்கின்றது என்றும் கண் மருத்துவர்கள் கூட கூறியுள்ளனர்.