நோ பார்க்கிங் போர்டு விவகாரம்! உயர் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை!!
சமீபத்தில் சென்னையில் குடியிருப்புவாசிகளின் வீடுகள் முன்னே அமைக்கப்பட்ட நோ பார்க்கிங் போர்டு சம்பந்தமான விவகாரம் ஒன்றிற்காக உயர் நீதிமன்றம் தமிழக காவல் துறைக்கு ஒரு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
நந்தகுமார் என்பவர் வீடுகளின் முன் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள நோ பார்க்கிங் போர்டுகளை நீக்கக்கோரி ஒரு வழக்கினைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மாம்பலம், மந்தைவெளி, அடையாறு, அசோக்நகர், மயிலாப்பூர், தியாகராய நகர் போன்ற சென்னையில் அமைந்துள்ள பகுதிகளில் வீடுகளுக்கு முன்னால் நோ பார்க்கிங் போர்டுகள் அனுமதியின்றி வைத்திருப்பதாகக் கூறப்பட்டது. இந்த வழக்கினை பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியவர்கள் விசாரித்தனர்.
இந்த மனுவில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் நோ பார்கிங் போர்டுகளையும், பூந்தொட்டிகளையும் நீக்க வேண்டும் என்ற வேண்டுதல் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து காவல் துறை மற்றும் சென்னை மாநகராட்சியானது நோ பார்கிங் போர்டுகளை வைக்க அனுமதி கொடுக்கப்படவில்லை என்ற பதிலை அளித்தது.
தகவல் உரிமை சட்டத்தின் மூலம் இவ்வாறு பதில் அளித்த பின், உயர் நீதிமன்றமானது நோ பார்க்கிங் போர்டுகளை அகற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் குறித்த அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறைக்கு உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கானது இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.