சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம் – தேவசம் போர்டு திடீர் அறிவிப்பு

0
129

கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கை அறிவித்த மத்திய அரசு அதில் வழிபாட்டுத் தலங்களுக்குத் தளர்வுகள் அறிவித்தது.

அதன் படி 8ம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த விதிமுறையை ஏற்றுக் கேரள மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் எனக் கேரள முதல்வர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து ஜூன் 9 முதல் கேரளாவில் கோவில்கள் திறக்கப்பட்டன. இதனையடுத்து இந்த மாதம் 14ம் தேதி சபரி மலை நடை திறக்கப்படுவதையடுத்து அதற்கான முன் பதிவு நேற்று (10.06.2020) முதல் துவங்குவதாக திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று தேவசம் போர்டு தலைவர் வாசு, கோவில் தந்திரி மகேஸ் மோகனரு ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, கோவில் நடைதிறப்பு, பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என தந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனையைத் ஏற்றுக் கொண்ட அமைச்சர் கடகம்பள்ளி, கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜூன் 14ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட மாட்டாது எனவும், அதனால் யாரும் சபரி மலைக்கு வர வேண்டாம் எனவு தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கவிருந்த ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.