Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரிசர்வ் வங்கி அதிரடி! ரூபாய் நோட்டுகளில் காந்தியடிகளின் புகைப்படம் மாற்றப்படுகிறதா?

இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்கும் ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளில் அண்ணல் காந்தியடிகளின் புகைப்படத்துடன் ரவீந்திரநாத் தாகூர், அப்துல்கலாம், உள்ளிட்டோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தவி ருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி சார்பாக இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயால் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் சில ஊடகங்களில் தற்போதைய கரன்சி நோட்டுகளில் ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யப்போகிறது என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

வங்கியின் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை மாற்றி வேறு புகைப்படங்களை பயன்படுத்தவிருப்பதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் ரிசர்வ் வங்கியிடம் இது போன்ற எந்தவிதமான திட்டமுமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் சுதந்திரம் பெற்ற 1947 உள்ளிட்ட காலத்தில் முதலில் பிரிட்டன் மன்னர் படத்தை மாற்றி சாரனாத் சிங்கங்களின் புகைப்படம் சேர்க்கப்பட்டது. அதன் பிறகு 1969 ஆம் வருடத்தில் தான் முதன்முதலாக அண்ணல் காந்தியடிகளின் புகைப்படம் 100 ரூபாய் நோட்டில் பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன்பிறகு கடந்த 1987-ம் வருடத்தில் 500 ரூபாய் நோட்டில் காந்தியடிகளின் புகைப்படம் முதல்முதலாக பயன்படுத்தப்பட்டு அன்றிலிருந்து காந்தியடிகளின் புகைப்படம் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்க டாலர் நோட்டுகளில் அந்த நாட்டின் முன்னோடி தலைவர்களான ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் பிராங்கிளின், தாமஸ் ஜெபர்சன், ஆண்ட்ரூ ஜாக்சன், ஆபிரஹாம் லிங்கன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில் இந்தியாவிலும் இரு தலைவர்களின் படங்கள் பயன்படுத்த வேண்டும் என்று அவ்வப்போது பேச்சுக்கள் எழுந்து வந்தது. இந்த நிலையில், இதற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக விளக்கம் வழங்கியிருக்கிறது.

Exit mobile version