2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2019 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசுக்கான 2019 ஆம் ஆண்டின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் 7 முதல் அக்டோபர் 14 வரை ஒவ்வொரு துறைக்குமான நோபல் பரிசு தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஏற்கெனவே மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தற்போது வேதியியல் துறைக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் பி குட்எனாப், ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் அகிரா யோஷினே ஆகிய மூவரும் இந்தப் பரிசை வென்றதாக நோபல் பரிசுக்கான கமிட்டி அறிவித்துள்ளது. தற்போதைய எலெக்ட்ரானிக் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் லித்தியம் பேட்டரிகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக இந்த வேதியியல் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.
1970 ஆம் ஆண்டு ஸ்டான்லி விட்டிங்ஹாம் லித்தியம் பேட்டரிகளை முதன்முறையாக உருவாக்கினார். இந்த பேட்டரிகளின் செயல்திறனை ஜான் பி குட்எனாப் இரு மடங்காக உயர்த்தினார். அகிரா யோஷினோ லித்தியம் பேட்டரிகளில் உள்ள தூய லித்தியத்தை அகற்றி, லித்தியம் அயனிகளைப் பயன்படுத்தி அதன் பாதுகாப்பை மேலும் பன்மடங்காக அதிகரித்தார். வயர்லெஸ் மற்றும் படிம எரிபொருள் பயன்பாட்டில் இல்லாத சமூகத்தை உருவாக்க இவர்களின் ஆராய்ச்சி பயன்படும் என்று நோபல் பரிசு கமிட்டி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது. மேலும், இதனையடுத்து அக்டோபர் 11 ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், அக்டோபர் 14இல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகளும் அறிவிக்கப்படவுள்ளதாக நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.