இதை யாரும் விரும்பவில்லை… உடனடியாக கைவிடுங்கள்… மக்கள் போராட்டம்!
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்பட பல நகரங்களில் தாக்குதலை நடத்தியது. இதனால் உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக போர் தொடர்கிறது. இந்த போருக்கு பல நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்ததுடன் போரை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு காணப்பட்டது. மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்பட 53 நகரங்களில் புதின் நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்போது அவர்கள் உக்ரைன் மீதான போர் தேவையில்லாதது. எனவே இந்த போரை உடனடியாக கைவிட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர். மேலும், போரை உடனடியாக நிறுத்துங்கள்… போர் வேண்டாம்… உக்ரைன் நமக்கு எதிரியல்ல… இந்த போரை யாரும் விரும்பவில்லை… யாருக்கும் இந்த போர் தேவையில்லை என கோஷங்கள் எழுப்பினர்.
மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்தை தொடர்ந்து, ஆயுதம் ஏந்திய போலீசார் போராட்டம் நடைபெற்ற இடங்களில் குவிக்கப்பட்டனர். மேலும் 1,700 பேரை கைது செய்த அவர்கள் போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.