ஒரே மாதத்தில் ஏழாவது ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா! அச்சத்தில் அண்டை நாடுகள்!

0
166
Hypersonic Missile

ஏவுகணை சோதனை என்றாலே உலக நாடுகளுக்கு நினைவுக்கு வருவது வடகொரியாதான். அந்த அளவுக்கு அடிக்கடி ஏவுகணைகளை சோதனை செய்து அண்டை நாடுகளை மட்டுமல்லாது மற்ற உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் போது நாட்டு மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உரையாற்றும் போதும், ஏவுகணை சோதனை, அணு ஆயுதம், அமெரிக்கா பற்றியெல்லாம் பேசி நாட்டு மக்களின் நாடி நரம்பை துடிக்க வைப்பது வழக்கம். இந்த ஆண்டு புத்தாண்டு உரையில், இவற்றை தவிர்த்துவிட்டு, உணவுப் பொருட்கள் உற்பத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பது உள்ளிட்டவை குறித்து கிம் ஜாங் உன் கூறி உலக நாடுகளை உரைய வைத்தார்.

இதனால், ஏவுகணை சோதனைகள் இருக்காது என நம்பி சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட எதிர் நாட்டு தலைவர்களுக்கு, சைலன்சர் போட்டு ஆப்பு வைத்து வருகிறார் கிம் ஜாங் உன். புத்தாண்டு முடிந்த முதல் வாரத்திலேயே ஏவுகணை சோதனைகளை செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பெல்லஸ்டிக் ஏவுகணைகள் ஆய்வு செய்ததாக மற்ற நாடுகள் நம்பிய போது, சூப்பர் சோனிக் ஏவுகணைகளை ஆய்வு செய்ததாக வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், இன்று புதிதாக மற்றொரு ஏவுகணையே கிழக்கு கடலில் ஏவி வடகொரியா ஆய்வு செய்துள்ளது. இதனை தென் கொரியா ராணுவம் உறுதி செய்துள்ளது. பெல்லஸ்டிக் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா ஆய்வு செய்ததாக தெரிகிறது. எனினும், எந்த வகையான ஏவுகணையை ஆய்வு செய்தது என்ற அறிவிப்பை வடகொரியா அரசு இன்னும் வெளியிட வில்லை.

புது வருடம் தொடங்கி ஒரு மாதம் கூட முழுமையாக முடியாத நிலையில், வடகொரியா நடத்தியுள்ள ஏழாவது ஏவுகணை சோதனை இதுவாகும். ஆய்வுக்கு மட்டுமே இவ்வளவு ஏவுகணைகளை பயன்படுத்துகிறது என்றால், ராணுவத்தில் எவ்வளவு ஏவுகணைகளை வைத்திருப்பார்கள் என எதிர் நாடுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.