ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 74 ஆண்டுகள் கழித்து சந்தித்து கொண்ட சகோதரர்கள்!
இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் பிரிவினையின் போது பிரிந்த இரண்டு சகோதரர்கள் சுமார் 74 ஆண்டுகள் கழித்து நேரில் சந்தித்து உள்ளனர்.
1947ஆம் ஆண்டு நடந்த இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது அப்போது குழந்தைகளாக இருந்த முகமது சித்திக் மற்றும் முகமது ஹபீப் என்ற சிறுவர்கள் பிரியும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அண்ணன் முகமது ஹபீப் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கர்தார்பூர் பகுதியிலும் அவருடைய தம்பி முகமது சித்திக் பாகிஸ்தானில் உள்ள பைஸ்லாபாத்திலும் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக தம்பி முகமது சித்திக் அண்ணன் முகமது ஹபீப்பை சந்திக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் தன்னுடைய அண்ணனைக் கண்டுபிடிக்க முடியாமல் அவர் தவித்துள்ளார். பின் அவருடைய துயரை உணர்ந்த உறவினர்கள் அவருக்கு உதவியாக அவருடன் சேர்ந்து அவருடைய அண்ணனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் ஒரு வழியாக சமூக ஊடகங்கள் மூலம் அவருடைய அண்ணன் முகமது ஹபீப்பை கண்டுபிடித்த உறவினர்கள் இருவரையும் சந்திக்க வைக்க ஏற்பாடுகள் செய்தனர். அதன்படி அண்ணன், தம்பியான முகமது ஹபீப் மற்றும் முகமது சித்திக் ஆகிய இருவரும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான கர்தார்பூரில் சந்தித்து உள்ளனர்.
74 ஆண்டுகள் கழித்து அண்ணன், தம்பி சந்தித்த நிலையில் இருவரும் கண்ணீர் மல்க கட்டிப் பிடித்து பாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.