தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் இளைய மகன் ஜெயபிரதீப் ஆன்மீக பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார் . சென்ற சில வருடங்களாக தன்னுடைய சகோதரரும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் வெற்றி, மற்றும் சென்ற சட்டசபை தேர்தல் நடந்த சமயத்தில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் வெற்றி, போன்றவற்றுக்காக பல வேலைகளை செய்து இருக்கின்றார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் இவர் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் அது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா அவர்கள் விரைவில் குணமாகி எதிர்காலத்தில் அவருடைய பணிகளை தொடர வேண்டும். அதோடு நிம்மதியான, மகிழ்ச்சியான, வாழ்வை வாழ்ந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். அதோடு இது அரசியல் சார்ந்த பதிவு கிடையாது எனவும் என் மனதில் இருக்கின்ற மனிதாபிமானத்தின் வெளிப்பாடுதான் இது எனவும் பதிவிட்டிருக்கிறார். இவருடைய இந்தப்பதிவு அதிமுக வட்டாரத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சசிகலா விடுதலை ஆவதற்கு முன்னரே பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு ஆதரவாக இருந்து வருவதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன .ஆனாலும் அது தொடர்பாக பன்னீர்செல்வம் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் கட்சி சார்பான நிகழ்ச்சிகளில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் சசிகலாவை புறக்கணிப்பதாக வே தெரிவித்து வந்தார்கள். ஆனாலும் தற்பொழுது தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இளைய மகனான பிரதீப் இவ்வாறு ஒரு பதிவை போட்டு இருப்பது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.