Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கரூர் அருகே சேவல் சண்டையால் ஒருவர் உயிரிழப்பு

கரூர் அருகே நடந்த சேவல் சண்டையில் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி இளைஞரின் கழுத்தில் குத்தி அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து க.பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கடந்த 2014ஆம் ஆண்டு சேவல் சண்டையின் போது இருவர் உயிரிழந்த நிலையில் அங்கு சேவல் சண்டை சட்டரீதியாக தடை செய்யப்பட்டிருந்தது. ஐந்து ஆண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு தைப்பொங்கல் அன்று நீதிமன்றத்திடம் முறையான அனுமதி பெற்று அரவக்குறிச்சியில்
உள்ள பூலாம்வலசுவில் சேவல் சண்டை நடைபெற்றது.அதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் சேவல்கட்டு நடைபெற்றது.

அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் அவ்வப்போது சட்டத்திற்கு முரண்பாடாக பணம் கட்டி சேவல்கட்டு மற்றும் சூதாட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் நேற்று சின்னமுத்தாம்பாளையம் நடுக்கல்குட்டையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக சேவல் காலில் கத்தியைக் கட்டி சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது. இதில் மேல்நெடுஞ்கூரை சேர்ந்த முருகேசன் (30) என்பவர் சேவல்களை சண்டைக்கு விடும் ஜாக்கியாக இருந்துள்ளார்.

சேவல் சண்டையின் போது சேவல் காலில் கட்டியிருந்த கத்தி முருகேசன் என்ற இளைஞர் ஒருவரின் கழுத்தில்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து க.பரமத்தி போலீஸார் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சண்முகம் (62), விமல்குமார் (36), ஜெயசந்திரன் (47), சுமன் (37) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவான சக்திவேல் என்பவரை தேடி வருகின்றனர்.

ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக நடந்தப்பட்ட சேவல் சண்டையில் சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி குத்தி இளைஞர் உயிரிழந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version