டெல்லியை தொடர்ந்து மேலும் ஒரு மாநிலம் முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியது!
இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. அதனால் பல்வேறு மாநிலங்கள் பல கட்டுப்பாடுகளை விதித்து, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அந்தந்த மாநிலங்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் நேற்றைய தினம் கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் முழு நேர ஊரடங்கை அமல்படுத்துவதாக டெல்லி அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து பெங்களூருவில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தொற்று வேகமாக பரவி வரும் பெங்களூருவில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் 7ம் தேதி நிறைவடைய இருந்த இரவு நேர ஊரடங்கு அடுத்த 2 வாரங்களுக்கு நீட்டிப்பதாகவும் அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் ஆகியவை 50% இருக்கைகளுடன் செயல்பட வேண்டும் என்றும் மராட்டியம், கோவா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 6ம் தேதி முதல் ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்றும் 10, 11, 12 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.