ஒரே நாடு ஒரே நாளில் ஊதியம்: மத்திய அரசு திட்டம்
ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை போன்ற மத்திய அரசின் கொள்கைகளுக்கு நடுவே தற்போது ஒரே நாடு ஒரே நாளில் சம்பளம் என்ற திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது
நாடு முழுவதும் ஒரே நாளில் அனைத்து துறை ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாள் தேர்வு செய்யப்பட்டு அந்த நாளில் நாடு முழுவதிலும் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றும் இது தொடர்பான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற பிரதமர் மோடி ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதன்மூலம் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றும், அதுமட்டுமின்றி அனைத்து துறைகளிலும் ஒரேமாதிரியான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.