Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு! ஓபிஎஸ் முதலமைச்சருக்கு வைத்த முக்கிய வேண்டுகோள்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் வெளியிட்டிருக்கின்ற வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது, தமிழ் மீது மிகுந்த பற்று உள்ளது போல காட்டிக்கொள்ளும் திமுக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பில் இருக்கின்ற பொருட்களை வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து இருப்பதும், அந்த பொட்டலங்களில் ஹிந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதும், கடுமையான கண்டனத்திற்கு உரியது என்று கூறியிருக்கிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கத்துடன் கூடிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்த சூழ்நிலையில், இந்த வருடத்திற்கான பொங்கல் திருநாளுக்கு துணிப்பையுடன் கூடிய 21 சமயல் பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் தமிழக மக்கள் உற்சாகம் இழந்து காணப்பட்டு வருகிறார்கள். இந்த பொருட்கள் வழங்குவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பதை நான் சுட்டிக்காட்டினேன். ஆனால் ஒரு சிலர் தவறான கருத்துக்களை பரப்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார்.

தவறான கருத்துக்களை யாரும் பரப்பியதாக கூறவில்லை. தரமற்ற பொருட்கள், எடை குறைவு, பொருட்களின் எண்ணிக்கை குறைவு, துணிப்பை வழங்காமை, என்று பல்வேறு உண்மை நிகழ்வுகளை தான் பொதுமக்கள் எடுத்து தெரிவித்தார்கள். அவற்றின் காணொளி ஆதாரமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடையே வரவேற்பு இல்லை என்பதற்கான எதார்த்தம் இதை விட வேறு இல்லை ரொக்கமாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு இருந்தால் கூட மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று மக்கள் தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். இந்தத் திட்டத்தினால் தமிழக மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை, பயனாளிகள் யார் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். ஆக மொத்தத்தில் இந்த திட்டம் படுதோல்வி அடைந்து உள்ளது என்பது தான் உண்மை என்று தெரிவித்து இருக்கிறார்.

இவற்றையெல்லாம் நான் சுட்டிக் காட்டுவதற்கு காரணம் மக்கள் படும் அவதி, மக்களிடையே காணப்படும் குறைகள், மக்களிடையே நிலவும் அதிருப்தி, உள்ளிட்டவற்றை தமிழக அரசின் கவனத்திற்கும், முதலமைச்சரின் கவனத்திற்கும், எடுத்துச் செல்ல வேண்டிய கடமை எனக்கு உள்ளது. பொதுமக்களின் புகார்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும், முதலமைச்சருக்கு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே முதலமைச்சர் இதில் உடனடியாக நேரடியாக தலையிட்டு இந்த திட்டத்தில் நடந்திருக்கின்ற முறைகேடுகள் தொடர்பாகவும், குளறுபடிகள் தொடர்பாகவும், விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் இதுபோன்ற தவறுகள் இனி வரும் காலத்தில் நடக்காத விதத்தில் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Exit mobile version