ஒரே ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ.59,000 – குழந்தை பெற்றெடுக்க எலுமிச்சையை ஏலம் எடுத்த தம்பதி

0
209

முருகன் வேலில் சொருக்கப்பட்ட ஒரேஒரு எலுமிச்சை பழம் ரூ.59,000 க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ளது பழமையான ரத்தினவேல் முருகன் கோவில். இரட்டை குன்று முருகன் என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் போது முருகனின் வேலில் சொருக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை ஏலம் விடுவது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர திருவிழா 9 நாட்கள் வரை நடைபெற்றது. விழாவின் ஒவ்வொரு நாளும் ஒரு எலுமிச்சைப்பழம் முருகனின் வேலில் சொருக்கப்பட்டது. 9 நாள் விழாவுக்கு மொத்தமாக 9 எலுமிச்சை பழங்கள் சொருக்கப்பட்டன. நேற்றுடன் பங்குனி உத்திர திருவிழா முடிந்த நிலையில் எலுமிச்சை பழங்களை ஏலம் விடும் நிகழ்வு நடந்தது.

முதல்நாளில் முருகனின் வேலில் சொருக்கப்பட்ட எலுமிச்சைப்பழத்தை ரூ.59,000-க்கு கடலூரை சேர்ந்த தம்பதிகள் ஏலம் எடுத்துள்ளனர். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி ஏலம் எடுத்துள்ளனர். 2வது நாள் வைக்கப்பட்ட பழம் ரூ.19,000க்கும், 3வது நாள் பழம் ரூ.25,000க்கும், 4வது நாள் பழம் ரூ.14,500க்கும் என என்று மொத்தமாக 9 நாட்களுக்கும் வைக்கப்பட்ட பழங்களானது ரூ.1,43,900-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.