ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று மாலை இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திங்கள் கிழமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கு ஒன்றில், நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராகி அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளதாகவும், இதில் ஊட்டிக்கு மட்டும் தினமும் 20,000 வாகனங்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவில், இவ்வளவு வாகனங்கள் சென்றால் உள்ளூர் மக்கள் நடமாட முடியாது, சுற்றுச்சூழலும், வன விலங்குகளும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, ஐஐடி – ஐஐஎம் ஆய்வு அறிக்கை அளிக்கும் வரை இடைக்கால நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.
மே 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை கொரோனா கால கட்டத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை ஊட்டி மற்றும் கொடைக்கானலில் அமல்படுத்த வேண்டும் என்று நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இன்று மாலை இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாகவும். இதற்கான தனி இணையதளத்தை அரசின் தொழில்நுட்பத்துறை உருவாக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும், ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்களுக்கு அனுமதி, உள்ளூர் வாகனங்களுக்கான நடைமுறைகள் என்ன? ஆகியவை இன்று மாலை வெளியாகும் அந்த அறிவிப்பில் இடம்பெற்றிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.