வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் கூட்டணி தொகுதி பங்கீடு, முடிந்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதிமுக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலால் கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ.வேட்பாளர்களை அறிமுகம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் தோப்பு வெங்கடாசலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர், மீண்டும் அதிமுகவில் போட்டியிடுவதாக விருப்ப மனு கொடுத்தார். ஆனால் அதிமுகவில், அவருக்கு சீட் வழங்கவில்லை. பெருந்துறை ஊராட்சி ஒன்றி செயலாளர் ஜெயகுமார் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து ஜெயகுமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், தோப்பு வெங்கடாசலம், அதிருப்தியில் இருந்தார்.
சமீபத்தில் பெருந்துறையில் ஆதரவாளர்கள் உடன் நடந்த கூட்டத்தில் கூட நான் என்ன தவறு செய்தேன் என தோப்பு வெங்கடாசலம் கண்ணீர் விட்டு கதறி அழுதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனக்கு சீட் கிடைக்காததால் விரக்தியில் இருந்த எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், அதிமுகவுக்கு எதிராக, பெருந்துறை தொகுதியில், சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதையொட்டி அவர், இனறு மதியம், தனது ஆதரவாளர்களுடன் சென்று, தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்கிடையில், தற்போது அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜெயகுமார், கடந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என குற்றஞ்சாட்டி வருகிறார். இதனால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.