அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதற்கு போட்டியாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களையும் கட்சியிலிருந்து நீக்குவதாக பன்னீர்செல்வம் தரப்பில் உத்தரவு வெளியிடப்பட்டது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் என பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி என்று இரு தரப்பும் அதிமுகவிற்கு போட்டி போட்டு வருவதால் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட செயலாளர்களை பன்னீர்செல்வம் நியமனம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து புதிய மாவட்ட செயலாளர்கள் பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
இந்த நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக திருச்சி புறநகரத்திற்கு மாவட்டத்திற்கு அவை தலைவராக கேகே மகாலிங்கம், இணைச் செயலாளர், துணைச் செயலாளர் போன்ற பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை பன்னீர்செல்வம் நியமித்துள்ளார்.
அதேபோன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு அவை தலைவராக கே பாலகிருஷ்ணனையும், இணைச் செயலாளராக கவிதாவையும் அதேபோல பொருளாளர், ஒன்றிய கழகச் செயலாளர் இன்று பல பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை அறிவித்துள்ளார் பன்னீர்செல்வம்.
திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட அவை தலைவராக அ.மகாலிங்கத்தையும், இணை செயலாளராக முத்துக்குமாரியையும் நியமனம் செய்துள்ளார். அதேபோல பல நிர்வாகிகளை பன்னீர்செல்வம் நியமனம் செய்திருக்கிறார் புதிய நிர்வாகிகளுக்கு கழக உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் என்று ஒரு தனி அணி செயல்பட்டு வருவதால் தேர்தலில் தோல்வியை தழுவும் நிலை அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. தற்சமயம் தனியே செயல்பட்டு வரும் பன்னீர்செல்வத்தால் மேலும் பின்னடைவை அதிமுக சந்திக்கும் நிலை உண்டாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.