ஓபிஎஸ் பெயர் அரசு நிகழ்ச்சி  அழைப்பிதழில் இல்லையாம்! ஆட்டம் காட்டும் எடப்பாடியார்!

0
190

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற வாக்குவாதம் அதிமுகவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து கூட்டு அறிக்கை  ஒன்றை வெளியிட்டு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்ததும் நாமறிந்ததே.

இதன்படி நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் விவகாரம் தலைவிரித்து ஆடியதாகவும், இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோர் இடையே நேரடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

‘என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா. உங்களை முதல்வர் ஆக்கியது சசிகலா’ என ஓபிஎஸ் காட்டமாக தெரிவித்ததாகவும், ‘இருவரையும் முதல்வர் ஆக்கியது சசிகலா தான்’ என்று இபிஎஸ் பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது வரும் அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என்ற நிலையில் ஓபிஎஸ் தனது இல்லத்தில் ஆலோசனைகளை தனது ஆதரவு வட்டத்தை பெருக்கும் வகையில் மேற்கொண்டு வருகிறாராம். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடந்த ஊரடங்கு தொடர்பான கூட்டம் உள்ளிட்ட இரண்டு முக்கிய கூட்டங்களில் ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லையாம்.

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் நாளை நடைபெற உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், மாநகராட்சி அழைப்பிதழில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இடம்பெறவில்லை.

அரசு சார்ந்த விழாக்களில் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என்றாலும் முதல்வர் பெயருக்கு அடுத்தபடியாக அவரது பெயர் இடம் பெற்றிருப்பது வழக்கமாக இருந்தது. தற்போது இந்தப் புறக்கணிப்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.