Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பல மாவட்டங்களில் நிவாரண தொகையுடன் கூடிய மளிகை பொருட்கள் கட்! பரிதவிப்பில் பொதுமக்கள்!

கடலூர் கிருஷ்ணகிரி விழுப்புரம் பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தமிழக அரசின் மளிகை பொருட்களை பெற இயலாமல் பொதுமக்கள் தவித்து வருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி எல்லோருக்கும் மளிகை தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகையை கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்திருக்கின்றார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி நோய்த்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த குடும்ப அட்டை வைத்திருக்கின்ற குடும்பங்களுக்கு முதல் தவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு விட்ட சூழ்நிலையில், இரண்டாவது தவணையுடன் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது.

இப்படியான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நிவாரண நிதியை மட்டுமே வழங்குவதாகவும், மளிகை தொகுப்புகள் வழங்கப்படுவதில்லை என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதேபோல மாவட்டத்தில் பொதுமக்கள் பலரும் இதே குறைகளை தெரிவித்து வருகிறார்கள். பல இடங்களில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மல்லிகையை தொகுப்பு பைகள் நியாயவிலை கடைகளுக்கு செல்வதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சில நியாயவிலை கடைகளில் இந்த மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக நாள் மற்றும் நேரம் போன்றவற்றை குறித்து டோக்கன்கள் கொடுக்கப்பட்டாலும் குறிக்கப்பட்ட நேரத்தில் மளிகை பொருட்கள் வராத காரணத்தால், மல்லிகை தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகையை வழங்க இயலாமல் நியாய விலை கடை ஊழியர்கள் தவித்து வருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

சில நியாயவிலை கடைகளில் டோக்கன்கள் போன்றவற்றை வாங்கிக் கொண்டு ஒருசிலருக்கு நிவாரண தொகை மட்டும் கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக, அந்த ஒரு சிலருக்கு மளிகை தொகுப்பு முழுவதுமாகவே கிடைக்காமல் போய்விடுகிறது. அதேநேரத்தில் சிலருக்கு மளிகை தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகையும் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

அதேபோல பெரம்பலூர் மாவட்டத்தில் மளிகைப் பொருட்களில் துவரம் பருப்பு போன்ற ஒருசில பொருட்கள் இல்லை என்று தெரிவித்து விடுகிறார்களாம் நியாய விலை கடை ஊழியர்கள். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள்.இதன் காரணமாக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் எல்லோருக்கும் நிவாரண தொகையுடன் கூடிய மளிகை பொருட்கள் அனைத்தும் சரியாக கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களில் பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

Exit mobile version