ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலாவின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்த போது ஜெயலலிதா சமாதியில் போய் தியானம் செய்து தர்ம யுத்தம் தொடங்கியவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் பல பகீர் சர்ச்சைகளை கிளப்பினார். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்ற சில நாட்களிலேயே தினகரனை தள்ளிவைத்துவிட்டு ஓபிஎஸ்-இபிஎஸ் இணைவு விழா நடைபெற்றது.
அப்போது கூட தினகரன், சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல கன்டிஷன்களை ஓ.பன்னீர்செல்வம் போட்டிருந்தார். அதன் படி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. உண்மை வெளியாகும் முன்பே அடுத்த தேர்தலும் வந்துவிட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தேர்தலுக்கு முன்னதாக வெளியில் வந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மீண்டும் அதிமுக பொதுச்செயலாளராக கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கழக ஆட்சி அமைவதற்காக அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் எனக்கூறி சசிகலா அறிக்கை வெளியிட்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பியது.
இதனிடையே சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என ஓபிஎஸ் அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், இல்லையெல் தினகரன் உடன் கூட்டணி அமைக்க திட்டமிடுவதாகவும் கூட தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி – ஓபன்னீர்செல்வம் இடையே கருத்து மோதல்கள் வெடித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், சசிகலாவை புகழ்ந்து தள்ளியிருப்பது அதிமுக தொண்டர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், கழக ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக ஒதுங்கியுள்ளார். அதிமுகவும் கழக ஆட்சி தானே. அதை நினைத்து சசிகலா பேசியிருந்தால் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இதை சசிகலாவின் பெருந்தன்மையாக பார்க்கிறேன் எனக்கூறினார். சசிகலா மீது எனக்கு எப்போதும் வருத்தம் இருந்தது இல்லை. அம்மா காலமான போது அவர் மீது சில சந்தேகங்கள் இருந்தது, அதற்காக தான் நீதி விசாரணை வைத்து அவரை நிரபராதி என நிரூபிக்க ஆசைப்பட்டேன் என பதிலளித்தார்.
மேலும் ஜெயலலிதா மரண வழக்கில் அவர் மீது சந்தேகம் இன்று வரை உள்ளதா? என்ற கேள்விக்கு, “ஜெயலலிதாவுடன் 32 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் அவர் இருந்திருக்கிறார். சசிகலா மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இப்போது அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது உண்மையை சொல்லுவேன். ஜெயலலிதாவுடன் பயணித்த சசிகலா மீது எனக்கு நன்மதிப்பு தான் உள்ளது என அடுத்தடுத்து புகழ்ந்து தள்ளினார். ஏதோ சசிகலா விட்டுக்கொடுத்துவிட்டதால் தான் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற முடிந்தது போல் ஓபிஎஸ் பேசியுள்ளதாக எடப்பாடியாரும், அதிமுக தொண்டர்களும் உச்சகட்ட அதிருப்தியில் உள்ளனர்.