வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கு பயிற்சி வழங்க உத்தரவு
தமிழகம் முழுவதும் சமத்துவ மயானங்கள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அடுத்த மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்ற பட்டியலின பெண் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் பாதை மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து இருந்ததால், பொது பாதை வழியாக அவரது உடலை எடுத்துச் செல்ல கிராமத்தினர் முயற்சித்தனர்.
இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த இரு வகுப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சாலை ஓரத்தில் உடலை வைத்து பட்டினத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து மாற்றுப் பாதையில் உடலை கொண்டு செல்ல செய்தனர்.
கடந்த 2020ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதில் இருந்து மனித உரிமை மீறப்பட்டுள்ளது நிரூபணம் ஆகி உள்ளது எனக் கூறி, நாகலட்சுமியின் கணவருக்கு 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
சாதி மத மோதலின் போது, மனித உரிமை விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரைத்த மனித உரிமை ஆணையம், மாநிலம் முழுவதும் சமத்துவ மயானங்களை அமைக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்காத காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்தினருக்கும் பயிற்சி அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.