Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பழனி முருகன் தொடர்பாக சில தகவல்கள்!

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவதாக போற்றப்படுவது பழனி. இங்குதான் போகர் எனும் மகா சித்தரால் நவபாஷாணம் கொண்டு உருவாக்கப்பட்ட முருகன் சிலை இருக்கிறது. இதனை செய்து முடிக்க போகருக்கு 9 வருடங்கள் தேவைப்பட்டதாம். இந்த ஆலயத்தை பற்றி மேலும் சில சிறப்பு தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இத்தல முருகனுக்கு நாள்தோறும் 6 முறை அபிஷேக அலங்காரம் செய்யப்படும். இந்த நிகழ்வானது 5 முதல் 7 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும். ஒருமுறை அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால், அதன் பின்னர் அடுத்த அபிஷேகம் வரை முருகனுக்கு மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ நடைபெறாது.

தண்டம் தாங்கி ஆண்டி கோலத்தில் இருக்கும் இத்தல முருகனுக்கு தண்டாயுதபாணி என்று பெயர். இவருக்கு சந்தனம், திருநீறு, பஞ்சாமிர்தம், நல்லெண்ணெய் ஆகிய நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது.

மார்கழி மாதத்தில் மட்டும் அபிஷேகத்தில் பன்னீரும் சேர்க்கப்படும். இந்த அபிஷேகப் பொருட்களில் சந்தனம், பன்னீர் உள்ளிட்டவற்றை தவிர்த்து, மற்ற அனைத்தும் தண்டாயுதபாணியின் தலையில் வைத்து உடனடியாக அகற்றப்படும் .அவரை முழுமையாக அபிஷேகிப்பது சந்தனமும், பன்னீரும் மட்டும் தான்.

நவபாஷாணத்தால் செய்யப்பட்ட முருகப்பெருமானின் சிலை, மிகவும் சூடாக காணப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்தத்துடன் கலந்து, காலை அபிஷேகம் நடைபெறும் போது அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

தண்டாயுதபாணி சிலையில் நெற்றியில் அணிவிக்கப்பட்ட ருத்ராட்சம், கண், மூக்கு, வாய், தோல், கை விரல்கள் உள்ளிட்டவற்றில் மிக அற்புதமாக உளியால் செதுக்கப்பட்டது போல தெளிவாக இருக்கும். இது போகரின் கைவண்ணமாகும்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சிறிய மரகத லிங்கம் இருக்கிறது. இந்த மரகதலிங்கத்தை தரிசிக்க வலது பக்கம் சென்று தீபம் காட்டுதல் வேண்டும். தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.

இங்கே இரண்டு மரகத லிங்கம் இருக்கிறது. ஒன்று முருகர் சன்னதியிலும், மற்றொன்று போகர் சமாதியின் மேலும் இருக்கிறது. இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version