கோவில்களில் தமிழில் அர்ச்சனை! நேற்று முதல் தொடங்கியது நடைமுறை!

0
115

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை கடந்த 5-ஆம் தேதி முதல் ஆரம்பமானது. சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் இதனை ஆரம்பித்து வைத்த அமைச்சர் சேகர்பாபு விரைவில் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து கோவில்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அதனடிப்படையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல கோவில்களில் தமிழில் அர்ச்சனை ஆரம்பமானது.

ஒவ்வொரு கோவிலிலும் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக விளம்பர பலகை வைக்கப்பட்டு அதில் எந்த அர்ச்சகர் இதனை செய்ய இருக்கிறார் என்பதை குறித்த பெயர் மற்றும் செல்போன் நம்பர் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல தமிழகம் முழுவதும் இருக்கின்ற கோவில்களில் தமிழில் குடமுழுக்கு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.இந்தநிலையில், முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனிக்கு தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான அளவில் வந்து செல்கிறார்கள். மேலும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். ஆனால் தற்சமயம் நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வருகை சற்று குறைந்திருக்கிறது.

பழனியில் இதற்கான வேலைகள் சென்ற சில தினங்களாக நடந்து வந்தது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் அடைக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில், இன்று காலை முதல் வழக்கம் போல பழனி மலை கோவில் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
அதேபோல தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பம் ஆனது இதன் காரணமாக, கோவிலுக்கு வந்த பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். நீண்ட தினங்களாக தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்து இருந்த சூழலில் அது நடைமுறைக்கு வந்திருக்கிறது.

அதேபோல பழனி கோவிலின் உப கோவிலான திருஆவினன்குடி பெரியநாயகி, அம்மன் பெரியாவுடையார் மாரியம்மன், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை நேற்று முதல் ஆரம்பம் ஆனது. ஒவ்வொரு கோவிலிலும் இதுதொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் பெயரும் அதில் இடம் பெற்று இருக்கிறது.