அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியின் 82 மாவட்டச் செயலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை, ராயப்பேட்டையில் அமைந்துள்ள கட்சி தலைமையிலிருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலர் முனுசாமி, தலைமை நிலையச் செயலர் வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரச்சினைகள் குறித்து பொதுச்செயலர் கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் தற்போதைய நிலை, செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் ஆகியவற்றை அவருடன் பகிர்ந்து கொண்டனர்.
திமுக அரசின் தோல்விகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும் என்றும் பொதுச்செயலர் வலியுறுத்தினார். அதற்காக திண்ணை பிரசாரத்தை தீவிரமாக மேற்கொள்ளும் படி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். யார் யார் திண்ணை பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கான கணக்கெடுப்பு நடைபெறும். கட்சிப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுபவர்களுக்கே எதிர்வரும் தேர்தல்களில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற, கட்சி உறுதியுடன் செயல்பட வேண்டும் என பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான பூத் கமிட்டிகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். மேலும், மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், சில மாவட்ட நிர்வாகிகள் வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தின் நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக தகவல்கள் வந்துள்ளன. கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்சி ஒழுங்கு முறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுச்செயலர் தெரிவித்தார். கட்சியின் ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் தேர்தல் வெற்றிக்கான திட்டங்களை நிர்வாகிகள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.