Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பல்லடம் கொலை சம்பவம் எதிரொலி.. மது விலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

#image_title

பல்லடம் கொலை சம்பவம் எதிரொலி.. மது விலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

திருப்பூர் பல்லடம் அருகே மது போதை ஆசாமியால் நால்வர் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது.பல்வேறு கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனக்குரல் எழுப்பி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மக்களே வெகுண்டெழுந்து சாலை மறியல் மேற்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.பல்லடத்தில் நடந்த இந்தக் கொடூரச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாவது,

தேர்தல் பிரச்சாரத்தின்போது மேடைக்கு மேடை பூரண மதுவிலக்கு என முழங்கிய தி.மு.க., இன்று ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பிறகு, மது விற்பனையை அதிகப்படுத்துவதில் முனைப்புக் காட்டுவதன் காரணமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

குடிப் பழக்கத்தைத் தவிர்த்து மனிதனாக எல்லோரும் வாழ நடவடிக்கை எடுக்காமல், குடிப் பழக்கத்தை அதிகப்படுத்தி மனித குலத்தை அழிக்கும் பணிகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதைப் பார்க்கும்போது, ஆக்குவது கடினம், அழிப்பது சுலபம் என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

திமுக அரசின் பூரண மதுக் கொள்கை காரணமாக கடந்த 28 மாத கால தி.மு.க. ஆட்சியில் கொலை,கொள்ளை,பாலியல் துன்புறுத்தல் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில்,மதுக் குடித்ததை தட்டிக் கேட்டதால்,திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நான்கு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் நிலத்திற்கு சொந்தமான இடத்தில் ஒரு கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும்,

இதனைசெந்தில்குமார் தட்டிக் கேட்டதன் காரணமாக,ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் செந்தில்குமாரை சரமாரியாக அறிவாளால் வெட்டிக் கொன்றதாகவும், அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த செந்தில்குமாரின் உறவினர்களான மோகன்ராஜ்,புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்தக் கும்பல் வெட்டி கொன்றுள்ளதாகவும், அந்த இடமே ரத்த ஆறுபோல் காட்சி அளிப்பதாகவும் செய்தி வந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களே வெகுண்டெழுந்து சாலை மறியல் மேற்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.இந்தக் கொடூரச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கொலையுண்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அறிவைக் கெடுத்து,அமைதியைக் குலைத்து தனி மனிதனுக்கும்,சமுதாயத்திற்கும் அளவற்ற தீமைகள் ஏற்படுத்தும் மதுவை ஒழிப்பதில் நாட்டு மக்களும்,அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கும்.ஆனால்,தமிழ்நாட்டிலோ அரசே மதுவை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.இதன்மூலம்,சட்டம் ஒழுங்கை அரசே சீரழித்துக் கொண்டிருக்கிறது.பொதுமக்களின் உயிருக்கும்,உடைமைகளுக்கும் உத்தரவாதமில்லாத சூழ்நிலை நிலவுகிறது.

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு பற்றியோ,காவேரி நதிநீர்ப் பிரச்சனை பற்றியோ,மக்களின் அன்றாட பிரச்சனைகள் பற்றியோ கவலைப்படாமல்,எதற்குமே உதவாத ‘இந்தியா கூட்டணி’ குறித்து நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர். இதனைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பொதுமக்களின் பிரச்சனைகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இதுபோன்ற கொடூர கொலைச் சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்கும் வகையில், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டுள்ள கொலைக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து,அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி விரைந்து தண்டனைப் பெற்றுத் தரவும்,மது விலக்கை படிப்படியாகவாது நடைமுறைப்படுத்தவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version