Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தும் இடங்கள் மூடல்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!!

மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தும் இடங்கள் மூடல்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!!

இந்தியாவில் நாளை மறுநாள் குடியரசு தின விழா நடைபெற இருக்கிறது. தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாயையொட்டி முப்படைகளின் அணிவகுப்பு உள்பட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் டெல்லி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் மட்டும் சுமார் 27ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். டெல்லி காவல்துறை, மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.அந்த வகையில் வாகனங்கள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் சந்தேகிக்கும் படியான நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. விமான நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகள், பயணிகள் அறை உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய்கள் கொண்டும், வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டும் சோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தும் இடங்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் மூடப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

குடியரசு தின பாதுகாப்பு நடவடிக்கையாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனைத்து மெட்ரோ வாகன நிறுத்தும் இடங்களும் ஜனவரி 25ஆம் தேதி காலை 6 மணி முதல் ஜனவரி 26ஆம் தேதி மதியம் 2 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version