Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 29ஆம் தேதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. ஒட்டு மொத்தமாக 19 அமர்வுகள் நடைபெறும் 36 மசோதாக்கள், ஒரு நிதித்துறை குறித்த அலுவல் உள்ளிட்டவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். நாடாளுமன்ற விதி முறைகள் அனுமதிக்கும் எல்லா விஷயங்கள் தொடர்பாகவும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது அவையை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று உரையாற்றினார்.

பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், திமுக, அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், டிஎஸ்பி, டிஆர்எஸ், என்சிபி, சிவசேனா ,மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் ஆரம்பிக்க இருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

அத்தியாவசிய விலை பொருட்களின் விலை உயர்வு, சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெகாசஸ் உளவு விவகாரம், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

அத்துடன் புதிய அச்சுறுத்தலாக இருந்து வரும் போமிக்ரன் நோய் தொற்று நாட்டில் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பாக விவரிக்கப்படுகிறது. போதை மருந்து தடுப்பு மசோதா, சிபிஐ, அமலாக்கத் துறை பிரிவு இயக்குனர்களின் பதவி காலத்தை நீட்டிக்கபடுவதற்கான மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் திருத்த சட்ட மசோதா, டெல்லி சிறப்பு காவல் துறை திருத்த மசோதா தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா, நீதிபதிகளின் ஊதியத்தை திருத்துவதற்கான மசோதா, உள்ளிட்டவை இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

Exit mobile version