மீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..??
தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற இருப்பதால், நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று சென்னையின் கடலோர பகுதிகளில் தான் பெரும்பாலான கட்சிகளின் நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அனைத்து கட்சிகளும் மீனவ கிராமங்களை குறிவைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதாவது சென்னையை பொறுத்தவரை வசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை ஆகிய மூன்று முக்கிய தொகுதிகள் உள்ளன. இதில் மீனவ மக்களின் வாக்கு சதவீதம் அதிகளவில் உள்ளன. எந்த அளறிகு என்றால் வடசென்னை மற்றும் தென்சென்னையின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதே இவர்களின் வாக்குகள் தான்.
அந்தவகையில் வடசென்னையை எடுத்துக் கொண்டால் மொத்தம் உள்ள 17 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களில் 43 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்ளில் குறைந்தது ஒன்றரை லட்சம் வாக்காளர்களாவது இருப்பார்கள். இதேபோல் தான் தென்சென்னையில் சுமார் 50 மீனவ கிராமங்கள் உள்ளன.
அங்குள்ள 20 லட்சம் வாக்காளர்களில் மீனவ வாக்களர்கள் மட்டும் 2 லட்சம் பேர் உள்ளனர். இதனால் தான் அனைத்து கட்சி வேட்பாளர்களும் மீனவ கிராமங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இவர்களின் வாக்குகளை பெறுவதற்காக அதிமுகவின் ஜெயவர்தன், திமுகவின் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் கடுமையாக போட்டி போட்டு வருகிறார்கள்.
இருப்பினும் மீனவர்களின் வாக்கு யாருக்கு என்பது தெரியவில்லை. இதற்கிடையில் சமீபத்தில் மீனவ சங்கத்தினர் அவர்களின் நலன் காக்க சங்கம் சார்பில் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தனர். இப்படி உள்ள சூழலில் இவர்களின் ஆதரவு யாருக்கு என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.