ஆந்திரா மாநிலம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டப் போவதாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் பல்வேறு தரப்பு மக்களுக்கு பயன்படும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் குறிப்பாக நவரத்தினா திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்களுக்கு பல வழிகளில் நன்மை செய்யும் வகையில் ஆட்சி செய்து வரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டுவதாக, ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் முடிவு செய்து கோவில் கட்ட ஏற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவில் கட்டுவதற்கு, கோபாலபுரம் மண்டலத்தில் உள்ள ராஜம்பாளையம் பகுதியில் ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளனர். அங்கு கோயில் கட்டுவதற்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட கோதாவரி மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ தலாரி வெங்கட்ராவ் கோயில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வினை தொடங்கி வைத்துள்ளார்.
இதுகுறித்து கட்டுமானப்பணி செய்துவரும் நிர்வாகிகளிடம் கேட்டபோது, இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையிலும் மக்களுக்கு சிறப்பான வகையில் ஆட்சி செய்து வருகிறார். அவர் இந்த தொற்று நோய் பிடியிலும் மாநிலத்தின் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறார் எனவும், இதனால் நாங்கள் அவருக்கு கோவில் கட்ட முடிவு எடுத்ததாகவும், கோவிலில் அவரது சிலை உருவத்தை வைத்து தினமும் பூஜைகள் செய்வதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ தலாரி வெங்கட், ராமர் கோவில் பூஜை நடந்த அதே நாளில் இவருக்கும் கோவில் கட்டுமான பூஜையை நடத்துவதில் மிகுந்த சிறப்பு அடைகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.