கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்பட்டதை அடுத்து பாதிக்கபட்ட மக்கள் யாரும் 6 மாதம் மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று கேரள மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. சாதாரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிலச்சரிவாக மாறி பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு இந்தியா முழுவதையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி ஏராளமான மக்கள் மாயமாகி இருக்கும் நிலையில் 350க்கும் மேற்பட்டோர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அதில் பலருடைய உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் இன்னும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அண்மையில் திருமணமான தனது மகளின் ஒரு கையை மட்டும் வைத்து தந்தை இறுதிச் சடங்கு செய்தது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, பூஞ்சேரிமட்டம், அட்டமலை ஆகிய கிராமங்கள் முழுவதுமாக மண்ணில் புதைந்துள்ளது. அந்த இடங்களில் தற்பொழுது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியா முழுவதிலும் இருந்தும் தன்னார்வலர்கள் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் திரைப் பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் தன்னால் முடிந்த நிதியுதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரள மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி அவர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்கள் 6 மாதத்திற்கு மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.