ரஜினிகாந்த் எதைச் சொன்னாலும் அது மக்களிடம் போய் சேர்ந்து விடுமோ என்று இன்றைய அரசியல் தலைவர்கள் பயப்படுகின்றனர் என்று பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பேட்டி அளித்தாலும் சரி, மேடையில் பேசினாலும் சரி அவர் கூறிய கருத்தை வேண்டுமென்றே திரித்து ஒரு சில அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
லெட்டர்பேடு கட்சியினர் கூட ரஜினியை வைத்து தங்கள் கட்சியை விளம்பரம் தேட முயற்சித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது குறித்து கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் ரஜினி-பெரியார் சர்ச்சை குறித்து பழம்பெரும் அரசியல்வாதியும் நடிகருமான பழ கருப்பையா அவர்கள் கூறியதாவது:
ரஜினி எதைச் சொன்னாலும் உடனே பாய்வது என்பது அரசியல்வாதிகள் அவரை பார்த்து பயப்படுவதை காண்பிக்கிறது. ஏனென்றால் இன்றைக்கு இருக்கின்ற எந்த தலைவர்களுக்கும் மக்கள் செல்வாக்கு என்பது கிடையாது. ஆகவே ரஜினியின் கருத்து மக்களிடம் போய் சேர்ந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள். அதனால் ரஜினி எதை சொன்னாலும் எதிர்ப்பது என்று அரசியல்வாதிகள் கிளம்புவதாக எனக்கு தோன்றுகிறது. ரஜினி சொல்வது தவறாக இருந்தால் மக்கள் அதை புறந்தள்ளி விட்டு போவார்கள். அதுமட்டுமின்றி தவறான கருத்தை சொல்லிய ரஜினியையும் தவறாக நினைப்பார்கள் என்று பழ கருப்பையா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.