Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களே உஷார்… விதிமுறையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த கொரோனா விதிகளை மீறும் நபர்களுக்கான சட்ட மசோதா நிறைவேறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது‌. பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது அதில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி சட்டமசோதா நிறைவேற்றப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவை துவங்கியது. இதைத் தொடர்ந்து இன்று நடந்த சட்டப்பேரவையில் பல விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீட்டிற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த கொரோனா விதிகளை மீறுவோருக்கான சட்ட மசோதாவும் நிறைவேறியுள்ளது.

இதில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத தனிநபர்கள், நிறுவனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதை தடுப்பது இனி தண்டனைக்குரிய குற்றம் என்றும் முகக் கவசம் அணியாதவர்கள், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version