Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொள்ளையடித்த பணத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கிய நபர்கள் கைது!

சென்னையில் கொள்ளையடித்த பணத்தை வைத்து கொரோனாவால் ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.

 

சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே உள்ள பாடி சீனிவாசன் நகரில் வசித்து வருபவர் செல்வம். இவரே சொந்தமாக ஹைட்ராலிக் மெஷின் வைத்து தொழில் செய்துவருகிறார். இவர் சொந்த ஊரான திருக்கோவிலூரில் உள்ள உறவினர்களை பார்க்கச் சென்றுள்ளார்.

 

இதனை அறிந்த மர்ம நபர்கள் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 19 லட்சம் பணம் மற்றும் 16 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதன்படி செல்வம் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இது குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வது தெரிந்தது.

 

40க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் கண்டு கொண்டனர். அதன்படி அவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த குமரவேல், ராகுல் டேவிட், அரவிந்த், தினேஷ்குமார், ஹரிஷ் குமார் மற்றும் நித்தியானந்தம் ஆகியோர் தான் என்பது தெரியவந்தது.

 

மேலும் இதில் கொள்ளையடித்த குமரவேல் என்பவர் செல்வத்தின் உறவினர் ஆவார். செல்வம் வீட்டில் இல்லாததை அறிந்த குமரவேல் தனது நண்பர்களை அழைத்து அவரின் வீட்டில் புகுந்து கொள்ளை அடித்ததாகவும், கொள்ளையடித்த பணத்தை வைத்து ஊரில் ஊரடங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம், மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கியதாகவும் கூறினர்.

 

மேலும் அவர்களிடமிருந்து கொள்ளையடித்த 13 லட்சம் பணம் மற்றும் 16 சவரன் நகைகளையும், விலையுயர்ந்த 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கொள்ளையர்கள் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு சிறையில் அடைத்தனர்.

Exit mobile version