விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் குவிந்த மக்கள்! விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர்!
தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்ற சுற்றுலா தளம் உள்ளது. அது அனைவருக்கும் பிடித்தமான ஒரு இடம். அங்கு இயற்கை கொஞ்சும் அருவியும் இருப்பதன் காரணமாக அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அந்த இடத்திற்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் பல நாட்களாக பொது இடங்களில் மக்கள் கூட தடை விதித்து இருந்த நிலையில், தற்போது அரசு அனுமதித்து இருப்பதால், கூட்டம் கட்டுகடங்காமல் இருந்தது. மேலும் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் தொடர் விடுமுறை என்பதன் காரணமாக நேற்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அங்கு அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு சினி பால்ஸ் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளில் குளித்தனர். அதன்பிறகு முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, மீன் காட்சியகம், தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளையும் சுற்றிப் பார்த்தனர். அருவிக்கு செல்லும் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் சென்று காவிரி தாயின் அழகை கண்டு களித்தனர். அங்கு மெயின் அருவியில் தடையை மீறி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்ததன் காரணமாக கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதேபோல் மீன் வருவல் கடைகள், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளிலும் விற்பனை சூடுபிடித்தது. அங்கு பயணிகள் அதிக அளவில் குவிந்ததன் காரணமாக பஸ் நிலையம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குற்றச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் பரிசல்துறை நடைபாதை, மசாஜ் செய்யும் இடம், பஸ் நிலையம் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.