Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடர்ந்து மனித உயிர்களை காவு வாங்கும் விஷ வாயு தாக்கம்:! மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே சாயப்பட்டறை கால்வாயில் ஏற்பட்ட விஷவாயு தாக்கி லட்சுமணன் மற்றும் சுனில் என்பவர் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்பு குறித்து பதிலளிக்க வேண்டுமென்று, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு,மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை பகுதியில் அதிக அளவில் சாயப்பட்டறைகள் உள்ளன.இந்த சாயப்பட்டறை கழிவுகளை தேக்கிவைக்க தனியார் நிறுவனத்தால் ஒரு புதை சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த புதை சாக்கடையில் திடீரென அடைப்பு ஏற்பட்டு இருக்கின்றது.இதனால் சாயப்பட்டறை கழிவுகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு இருந்ததனால்,இந்த அடைப்பை நீக்குவதற்காக வள்ளுவபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் புதை சாக்கடைக்குள் இறங்கித் அடைப்பை நீக்க முயன்றுள்ளார்.ஆனால் அப்பொழுது புதை சாக்கடையில் இருந்து திடீரென்று வெளிவந்த விஷவாயு தாக்கி அவர் புதை சாக்கடைகுள்ளையே மயங்கி விழுந்துள்ளார்.அப்பொழுது இதனைப் பார்த்த முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுனில்(26) என்பவர் செய்வதறியாமல் அவரை காப்பாற்றும் நோக்கத்தில் சற்றும் யோசிக்காமல் அவரும் அந்த புதை குழிக்குள் இறங்கி உள்ளார்.புதை குழிக்குள் இறங்கிய சிறிது நேரத்திலேயே அவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வந்து சுனிலை மீட்டனர்.ஆனால்
லட்சுமிமனனை மீட்பதற்குள் சாயப்பட்டறை கழிவுகள் புதைகுழியை வந்தடைந்ததால் அவரை மீட்க முடியவில்லை.இந்நிலையில் சுனிலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு,லட்சுமணன் குறித்து தீயணைப்பு படையினருக்கு அங்கிருந்த மக்கள் தகவல் தெரிவித்தனர்.அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு லட்சுமணன் உடலை சடலமாக மீட்டனர்.மேலும் சுனில் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கால்வாயை சுத்தப்படுத்த கூறியவர்கள் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சமீபகாலமாக,சென்னையில் மனித கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவரும்,நாமக்கல் ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி
இருவரும்,தற்போது சாயப்பட்டறை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
சமீபகாலமாக விஷவாயு விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை,தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

காஞ்சிபுரத்தில் இரண்டு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தது குறித்து விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில் கூறியுள்ளவாறு: மாவட்ட ஆட்சித் தலைவர்,லட்சுமணன் மற்றும் சுனில் உயிரிழந்தது குறித்து 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version