ஞாயிறு ஊரடங்கு ரத்து – இறைச்சிக் கடைகளில் மக்கள் அலைமோதல்: காற்றில் பறந்த சமூக இடைவெளி!!

0
100

இரண்டு மாதங்களுக்குப் பின் ஞாயிறு பொது முடக்கம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இறைச்சி கடைகளில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாத காலமாக ஞாயிறுதோறும் எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனையடுத்து இறைச்சி கடைகள் அனைத்தும் சனிக்கிழமை இரவு வரை திறக்கப்பட்டு விற்பனையாகி வந்தது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகள் அனைத்திற்கும் சீல் வைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

செப்டம்பர் மாதத்திற்கான பொது முடக்க தளர்வுகளை அறிவித்த போது, இனி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று அதிகாலையில் இருந்தே இறைச்சிக் கடைகள் அனைத்தும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கின. மக்களும் இறைச்சிகளை வாங்க அதிக அளவில் வந்தனர். சென்னை காசிமேடு மீன் சந்தை உள்ளிட்ட இடங்களில் இறைச்சிகளை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் வந்ததனால் வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த இரண்டு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்ததால் மீன் சந்தை முழுவதுமாக மூடப்பட்டிருந்தது. இதனால் வழக்கமாக சந்தை போடும் பகுதியில் இல்லாமல் சாலையோரங்களில் வியாபாரிகள் மட்டும் மீன் விற்பனை செய்து வந்தனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமைகளிலே இறைச்சிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையும் இருந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, 5 மாத இடைவெளிக்கு பின் காசிமேட்டில் மீன்சந்தை திறக்கப்பட்டது. இதனையடுத்து மீன் வாங்குவதற்காக காசிமேடு மீன் சந்தையில் அதிக அளவில் மக்கள் குவிந்தனர். ஆனால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது தான் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.