அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. அதை தொடர்ந்து, தொற்றின் பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து, பிப்ரவரி 1ம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளி மற்றும் கல்லுாரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில்:-
ஜனவரியில் உச்சத்தை அடைந்து, அதிகரித்த கொரோனா தற்போது குறைந்து கொண்டே வந்தாலும், மக்கள் கவனக்குறைவாக இருந்தால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும். எனவே, அடுத்த சில வாரங்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் முகவசம் அணிவதை நிறுத்த கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து காணப்படுகிறது. மேலும், ராணிபேட்டை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதனால், தமிழகத்தில் தற்போது 4 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் புற்றுநோய் போன்ற இதர நோய்களை பொதுமக்கள் மறந்து விடக்கூடாது என்றும், ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என எச்சரித்துள்ள அவர், கடந்த ஆண்டு மட்டும் 55 விழுக்காடு பெண்களும், 45 விழுக்காடு ஆண்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தமிழகத்தில் மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வருகிற 19ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது தேர்தல் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கும் இந்த சூழலில் அடுத்த சில வாரங்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.