விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் தூங்காமல் தவிக்கும் மக்கள் !!

0
164

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சேலத்தில் உள்ள முக்கிய பகுதியான கிச்சிபாளையம் , ராஜபிள்ளை காடு, நாராயண நகர் , அம்மாபேட்டை, பச்சப்பட்டி, சீலாவரி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி இருந்தனர்.

தேங்கியிருந்த மழை நீரை நீக்கும் பணியில் அந்தந்த பகுதி மக்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக ஏரியை சுற்றியுள்ள களக்காடு ,காரப்பட்டி, கீரனூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் அந்தப் பகுதியில் பயிரிடப்பட்ட சோளம் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். ஏரியில் உள்ள நீரை மதகு வழியாக திறந்தால் மட்டுமே வீடுகளில் உள்ள தண்ணீர் வடியும் என்று அதிகாரிகளிடம் அவ்வூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனமழையின் காரணமாக கன்னங்குறிச்சியில் உள்ள மூங்கில் ஏரி வேகமாக நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் அங்கே சென்று குளிக்கவும் இறங்கவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் காவல்துறையினர் அங்கு செல்ல தடை விதித்து அந்த பகுதியை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.