ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், நளினி, உள்ளிட்ட 7 பேர் குற்றம் சாட்டப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருந்து வருகிறார்கள்.
இதில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனை எப்படியாவது விடுதலை பெற வைக்க வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டார். இதுவரையில் பலமுறை முதல்வர்களை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார்.
அவருடைய கோரிக்கைக்கு தமிழகத்திலிருந்த அனைத்து முதலமைச்சர்களும் செவிசாய்த்து அப்போது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள்.
இந்த நிலையில் சென்ற மார்ச் மாதத்தில் பேரறிவாளனுக்கு மாநில அரசு சார்பாக ஜாமின் வழங்கப்பட்டது. அவர் தற்போது வரையில் ஜாமினில் இருந்து வந்தார்.
இதற்கு முன்பாக கடந்த 2014ஆம் வருடம் பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது குற்றம் நிரூபிக்கப்படாமல் நான் மட்டும் எதற்காக சிறையில் இருக்க வேண்டும்? எதனடிப்படையில் என்னை 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வைத்திருக்கிறார்கள் என்பதை நீதிமன்றம் விசாரித்து என்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார் அந்த மனுவில்.
இதற்கிடையில் பேரறிவாளனை மாநில அரசு விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், பேரறிவாளனை மட்டுமல்லாமல் மற்ற 6 பேரையும் சேர்த்து விடுவிக்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது மாநில அரசு.
ஆனால் அதன் மீது அவர் எந்தவிதமான முடிவும் மேற்கொள்ளவில்லை ஆளுநருக்கு இதில் முடிவு எடுப்பதற்கான அதிகாரமிருக்கிறது. இருந்தாலும்கூட காலதாமதம் செய்வதற்காகவே இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், சென்ற வாரத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்து தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்றைய தினம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது, உச்ச நீதிமன்றம் மத்திய அரசையும்,ஆளுநரையும், கடுமையாக சாடி இருந்தது. குற்றம் நிரூபிக்கப்படாத ஒருவர் ஏன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருக்க வேண்டும்.
இதில் ஆளுநர் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும், சரியான முடிவு மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே எங்களுக்கு இருக்கக்கூடிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நாங்கள் பேரறிவாளனை விடுதலை செய்கிறோம் என்று காட்டமாக தெரிவித்து பேரறிவாளனை இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்தது.அதோடு தீர்ப்பு நகலையும் நேற்று மாலையே வெளியிட்டிருந்தது உச்சநீதிமன்றம்.
இதனைத் தொடர்ந்து தன்னுடைய விடுதலைக்காக போராடி அந்த எல்லோரையும் வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க போவதாக பேரறிவாளன் தெரிவித்தார்.
இதனடிப்படையில், நேற்று சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை தம்முடைய தாயாருடன் நேரில் சந்தித்த பேரறிவாளன் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
பேரறிவாளனின் சந்திப்பு தொடர்பாக தன்னுடைய வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளனை சந்தித்து கட்டியணைத்து மகிழ்ச்சியடைந்தேன் என தெரிவித்திருக்கிறார்.
மேலும் சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும், அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக அதன் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அவருடைய இல்லத்தில் நேற்றிரவு தன்னுடைய தாயாருடன் சென்று சந்தித்து பேசியிருக்கிறார். அந்த சமயத்தில் இருவரும் பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
மேலும் இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியையும் சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அவருடைய இல்லத்தில் பேரறிவாளன் சந்தித்தார்.அப்போது அவருடைய தாயார் அற்புதம்மாள் உடனிருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த சமயத்தில் தன்னுடைய விடுதலைக்காக அதிமுக எடுத்துவந்த நடவடிக்கைகளுக்காக பேரறிவாளன் மற்றும் அவருடைய தாயார் அற்புதம்மாளும் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.