சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களிலும் எல்லா பெட்ரோல் பங்குகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் புகைப்படம் அடங்கிய விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இந்த மாதம் 27ஆம் தேதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த மாநிலங்களில் தற்சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமலில் இருந்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் தலைவர்களின் விளம்பரப் பதாகைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்து வருகிறது தேர்தல் ஆணையம். அந்த விதத்தில் அப்படி வைக்கப்பட்டு இருக்கின்ற விளம்பர பதாகைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதற்கு மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கின்றது .தேர்தல் ஆணையத்திடம் புகாரும் அளித்திருக்கின்றது . இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் நேற்று முன்தினமே மேற்கு வங்கத்தில் பெட்ரோல் நிலையங்களில் இருக்கின்ற விளம்பர பதாகைகளில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் படத்தை அகற்ற அந்த மாநில தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் வெளியிட்டு இருக்கின்ற ஒரு புதிய அறிவிப்பில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் புதுச்சேரி, தமிழகம், கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருக்கின்ற பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கின்ற விளம்பர பலகைகளில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் புகைப்படங்களை 72 மணி நேரத்திற்குள் முழுமையாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.