வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கும் ஆண்களே தற்போது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எப்படி மகப்பேறு கால விடுமுறை வழங்கப்படுகிறதோ அதனை போலவே ஆண்களுக்கு இனி மகப்பேறு கால விடுமுறை கிடைக்கும். அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கபடுகிறது, இதனை பற்றியும் நாம் அறிந்திருக்கக்கூடும். பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுமுறைகள் சுமார் 26 வாரங்கள் அதாவது சுமார் 6 மாத காலங்கள் ஆகும். இதுவரை பெண்களுக்கு மட்டுமே இதுபோன்ற விடுமுறைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இப்போது தந்தையாகும் ஆண்களுக்கும் மூன்று மாத விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் இந்த மகிழ்ச்சிகரமான செய்தியினை இந்திய நிறுவனம் ஒன்று வெளியிட்டு இருக்கிறது, நிறுவனத்தின் இந்த முன் உதாரணமான முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. பல்வேறு அயல்நாடுகளில் இதுபோன்று தந்தையாகும் ஆண்களுக்கு மகப்பேறு விடுமுறைகள் அளிக்கப்பட்டு வருகிறது, இதனை கண்டு இந்தியாவில் உள்ள ஆண்மகன்கள் பலரும் கவலைப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்திய ஆண்களுக்கும் இந்த நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்தியாவில் பிரபலமாக தனது பணியை ஆற்றிக்கொண்டு இருக்கும் ஃபைசர் நிறுவனம் தான் இப்போது அதன் ஆண் ஊழியர்களுக்கு இந்த சலுகையினை அறிவித்து இருக்கிறது. ஃபைசர் இந்தியா சார்பில் இங்கு பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு பேட்டர்னிட்டி லீவ் பாலிசி அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைசர் நிறூவனம் ஆண் ஊழியர்களுக்கு 12 வார மகப்பேறு விடுப்பு கொள்கையினை அமல்படுத்தியுள்ளது. இந்தக் கொள்கையின் மூலம் தந்தையாகும் ஆண், குழந்தை பிறந்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்த விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மகப்பேறு விடுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு நேரத்தில் குறைந்தது இரண்டு வாரங்கள் மற்றும் அதிகபட்சம் 6 வாரங்கள் விடுமுறை பெற முடியும். மேலும் இந்த விடுமுறை வளர்ப்பு தந்தைகளுக்கு வழங்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.