காவி அரசியல் எதிரொலி: திருவள்ளுவரை சிறையில் வைத்த போலீசார்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் திருவள்ளுவரை கையிலெடுத்து அரசியல் செய்து வந்தனர் என்பது தெரிந்ததே. ஒரு பக்கம் திருவள்ளுவருக்கு காவியாடை உடுத்தி, விபூதி பூசி அவரை இந்து மதத்தின் அடையாளமாக மாற்ற பாஜக முயற்சி செய்தது. இன்னொரு பக்கம் திருவள்ளுவருக்கு கருப்பு ஆடை உடுத்தி அவர் நாத்திகர் என்று நிரூபிக்க திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் முயற்சி செய்தது. இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே திருவள்ளுவர் மாட்டிக் கொண்டு கொண்டு பெரும் பிரச்சனையில் சிக்கினார் என்பதுதான் உண்மை.
மேலும் தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி என்ற பகுதியில் இருந்த திருவள்ளுவர் சிலை திடீரென அவமதிக்கப்பட்டது. இதனையடுத்து பாஜகவினர் அந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து புனிதப்படுத்தியதோடு அந்த சிலைக்கு ருத்ராட்ச மாலை மற்றும் காவி உடை அணிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு போலீசார் கம்பி வேலி போட்டு பாதுகாத்து வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி திருவள்ளுவர் சிலையை சுற்றி மூன்று கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது
அரசியல்வாதிகளின் மலிவான அரசியல் காரணமாக தற்போது திருவள்ளுவர் சிலை கிட்டட்த்தட்ட சிறை வைக்கப்படும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதே உண்மையான திருவள்ளுவர் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. நேற்றும் இன்றும் ரஜினி மற்றும் அயோத்தி பிரச்சனை டிரெண்டிங்கில் இருப்பதால் அரசியல்வாதிகள் திருவள்ளுவரை மறந்துவிட்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது